ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : கிராம மக்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை அருகேயுள்ள பண்டாரம்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியாக அளித்த மனுக்கள் விவரம்:

எங்கள் கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்து வந்தனர். தற்போது அவர்கள் வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும், எங்கள்கிராமங்களில் உள்ள மகளிர் குழுக்களுக்கு பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை அளித்து வந்தனர். தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம் எங்கள் கிராமங்கள் புதுப்பொலிவு பெற்றன. சிலரது தவறான கருத்துக்களை கேட்டு ஊரில் உள்ள ஒருசிலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனால் ஒட்டுமொத்த கிராமங்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனநிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. அதிகாரிகள் குழுவை அமைத்து ஆய்வு செய்தால் உண்மை நிலவரம் தெரிய வரும்.

எங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்