பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மின்வாரிய அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மின் பகிர்மானவட்டம், மின் கோட்ட செயற்பொறியாளராக பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக புகார் எழுந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் முதல்வர் தனிப்பிரிவு, மின்சாரத்துறை அமைச்சர், மேற்பார்வை பொறியாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பினர்.
இந்நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கிளை சார்பில் திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக குற்றச்சாட்டுக்குள்ளான கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் அருள் தலைமை வகித்தார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் சங்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
இதில், வேலூர் மண்டலச் செயலாளர் கோவிந்தராஜ், மாநில செயலாளர் ஜோதி, வட்டச் செயலாளர் சிவசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago