திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திருப்பூர் முருகம்பாளையம் செல்லம் நகர் அருகேயுள்ள பகவதி நகரை சேர்ந்தவர் பி.மணிகண்டன். இவர், மாநகரக் காவல் ஆணையர்அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூர் கண்டியம்மன் நகர் 2-வது வீதியில் வசித்து வரும் மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம், என்னை நேரில் அணுகி, மாதத் தவணை மற்றும் வாரத் தவணையில் பணம் செலுத்தும் ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பங்குத்தொகை கிடைக்கும் என்றும், ஏலச்சீட்டானது அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்து நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதை நம்பி வாரந்தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தும் வகையில், எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் ரூ.80 ஆயிரம் முதிர்வுத் தொகை கொண்ட இரு ஏலச்சீட்டுகளில் சேர்ந்தேன். வாரந்தோறும் சீட்டுகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.4 ஆயிரத்தில் பங்குத் தொகை கழித்ததுபோக, செலுத்திய பணத்தை பெற்றுக்கொண்டு, சீட்டு புத்தகங்களில் கையெழுத்திட்டு கொடுத்து வந்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி சீட்டு முடிந்த பிறகு, அவர்களிடம் பணம் கேட்டதற்கு ஒரு மாதம் கழித்து தருவதாக தெரிவித்தனர். அவர்கள் சொன்ன தேதியில் சென்றபோது தம்பதிதலைமறைவானது தெரியவந்தது. இதேபோல 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை சீட்டுப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது, தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் உரிய நடவடிக்கைஎடுக்க காவல் ஆணையர் வே.வனிதா, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் க.பாலமுருகன் மேற்பார்வையில், ஆய்வாளர் ஆ.முனியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சீட்டு நிறுவனம் பதிவு செய்யப்படாமல், உரிய அரசு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த தம்பதியை நேற்று போலீஸார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘இதுபோன்று முறையாக பதிவுசெய்யப்படாத சீட்டு நிறுவனங்களில், பொதுமக்கள் யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago