மல்லசமுத்திரத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

மல்லசமுத்திரம் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செங்கோடு அருகே வையப்பமலையில் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சுரேஷ், ஆர்.திலகவதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் கே.செல்வம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி நகை அடகு வைத்து ஏமாற்றிய நபர்கள் மீதும், அதற்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வையப்பமலையில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும். எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி திருமணிமுத்தாறு திட்டத்தை காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும். மல்லசமுத்திரம் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும்.

முதியோர் ஓய்வூதியம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி சேவை மையங்களில் மருத்துவக் காப்பீடு அட்டை பெற அரசு அனுமதி தரவேண்டும். குடும்ப அட்டையில் பொருள் பெற செல்லும்போது கைரேகை வைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி உள்பட கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்