நகராட்சி கடைகளின் வாடகை உயர்வை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகளைக் கைது செய்த காவல்துறையினருக்கு வணிகர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.
ஈரோடு மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும், பல இடங்களில் பேருந்து நிலையங்கள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இடிக்கப்பட்ட கட்டிடமும், கட்டி முடிக்கப்படாத சூழல் இருக்கிறது. இவற்றிற்கு ஒரு காலக்கெடு நிர்ணயித்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஏற்கெனவே அங்கு கடை நடத்தியவர்களுக்கு குறைந்த பட்ச வாடகை உயர்வுடன் கடையை ஒதுக்க வேண்டும்.
பல மாவட்டங்களில் நகராட்சி கடைகளின் வாடகை கடுமையாக உயர்த்தியதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றி வாடகையைக் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் பறக்கும் படை அமைத்து, சோதனை நடத்தி வருகின்றனர். இதில், முறையாக வரி செலுத்துவோரை தொந்தரவு செய்யக்கூடாது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை தனது கொள்கையில் சட்ட திட்டங்களை மாற்றிக்கொண்டே உள்ளது. முழுமையான சட்ட திட்டங்கள் இன்னமும் அதிகாரிகளுக்கு தெரியாத நிலை உள்ளது. இதனிடையே சட்டங்கள் மாற்றப்படும் போதெல்லாம் வணிகர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும்.
காலாவதியான உணவுப் பொருட்களை உணவுக் கூடங்கள், கடைகளில் விற்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்.
அதேநேரம், அவற்றை உற்பத்தி நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையே எடுத்து செல்கின்றனர். அதுவரை அக்கடைகளில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது சோதனை நடத்தினால் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago