தூத்துக்குடி- கோவை, சென்னை இணைப்பு ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் செயலாளர் மா.பிரமநாயகம், பொருளாளர் வே.லெட்சுமணன், நிர்வாகச் செயலாளர் ஜே.ஏ.என்.ஆனந்தன், செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணிமுத்துராஜா ஆகியோர் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் அளித்த மனு விவரம்:
கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் தூத்துக்குடிக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதன்பின் தூத்துக்குடி – சென்னை, தூத்துக்குடி – மைசூரு விரைவு ரயில்கள் மற்றும் ஒகா – தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் ஆகியவை மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி – கோவை இரவு நேர இணைப்பு ரயில், தூத்துக்குடி – சென்னை பகல் நேர (குருவாயூர் எக்ஸ்பிரஸ்) இணைப்பு ரயில் மற்றும் திருநெல்வேலி- திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.
ஆனால், இந்த இணைப்பு ரயில்களின் இணை ரயில்களான நாகர்கோவில் - கோவை இரவு நேர ரயில், சென்னை – குருவாயூர் பகல் நேர ரயில் ஆகியவை தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, தூத்துக்குடி – கோவை இரவு நேர இணைப்பு ரயில், தூத்துக்குடி – சென்னை பகல் நேர இணைப்பு ரயில் ஆகிய ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.
மேலும் திருநெல்வேலி – பாலக்காடு இரவு நேர ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடி – சென்னை சிறப்பு ரயில் காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மைசூரு- தூத்துக்குடி ரயிலை காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடி வந்து சேருமாறு பயண நேரத்தைக் குறைக்க வேண்டும். லோக்மான்யா திலக் -மதுரை வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர், பாரப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மீளவிட்டான் - மேலமருதூர் வரை 14 கி. மீட்டர் தூரம் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. இந்தப் பாதையில் விரைவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.
மேலமருதூரில் இருந்து திருப்பரங்குன்றம் வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கூடுதலாக மீளவிட்டான், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம் ரயில்வே சந்திப்புகள் கிடைக்கும். மத்திய ரயில்வே அமைச்சருடன் இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago