அரியலூர் மாவட்டம் திருமானூரில் சாலை விரிவாக்கத்தில் வெட்டி அகற்றப்பட இருந்த அரச மரத்தின் அடிப்பாகத்தை மாற்று இடத்தில் சமூக ஆர்வலர்கள் நட்டுவைத்தனர்.
பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள், குறுகிய இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது அப்பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதிகளில் உள்ள புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருமானூர் ஒன்றிய அலுவலகம் அருகே நந்தியாறு வாய்க்காலின் வடகரையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் நிலை ஏற்பட்டது.
இதற்காக மரத்தின் கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டன. இதைக்கண்ட சமூக ஆர்வலர்களான வழக்கறிஞர் முத்துக்குமரன், பாளை திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மரத்தின் அடிப்பகுதியை வேறுடன் பிடுங்கி, அதை வேறு இடத்தில் நட தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி கேட்டனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சேதுபதி, உதவி கோட்டப் பொறியாளர் ரவிகுமார், உதவி பொறியாளர் விஜயலட்சுமி, ஒப்பந்ததாரர் சேவியர் உதவியுடன் நேற்று முன்தினம் இயந்திரங்கள் மூலம் மரத்தின் அடிப்பாகத்தை வேருடன் பெயர்த்தெடுத்து, ஒரு கிலோமீட்டர் தொலைக்கு கொண்டு சென்று கொள்ளிடத்தின் கரையில் நடப்பட்டது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago