திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வஉசியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த க.சுப்பிரமணியன் உருவப் படத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சைவ வேளாளர் சங்கத் தலைவர் வி.சி.ஜெயந்திநாதன் தலைமை வகித்தார். வஉசி சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷைனுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக கொம்புத்துறை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி பிரீத்திக்கு ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாவுக்கு பரிசாக ரூ. 2 ஆயிரம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், வஉசி வாழ்க்கை வரலாறு குறித்த நூல் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், திமுக மாநில துணை அமைப்பாளர்கள் வெற்றிவேல், உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago