தேர்வு அறையில் வார்த்தைகள் எதிரொலிப்பதாக கூறி - செய்யாறில் சுருக்கெழுத்து தேர்வர்கள் மறியல் :

செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தேர்வு அறையில் வார்த்தைகள் எதிரொலிப்பதாக கூறி தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் சுருக்கெழுத்து தேர்வு தி.மலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளன்று தமிழ் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்று ஆங்கிலம் தேர்வு நடைபெற்றது. 7 நிமிடத்தில் கூறப்படும் 840 வார்த்தைகளை கேட்டு, சுருக்கெழுத்தாக எழுத வேண்டும்.

இந்நிலையில், டிஜிட்டல் முறையில் ஸ்பீக்கர் மூலமாக கூறப்படும் அனைத்து வார்த்தைகளும் தேர்வு அறையில் எதிரொலிப்பதால், வார்த்தைகளை சரியாக கேட்க முடியவில்லை என தேர்வர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தனலட்சுமியிடம் முறை யிட்டும் பலனில்லை எனக் கூறி, தேர்வர்கள் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த செய்யாறு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்களை சமாதானம் செய்து, கல்லூரி முதல்வர் தனலட்சுமியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மாற்று அறையில் மீண்டும் தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மாற்று அறையில் தேர்வு நடைபெற்றது. அப்போதும், அதே குற்றச்சாட்டை தெரிவித்து தேர்வு அறையில் இருந்து தேர்வர்கள் வெளியேறினர். பின்னர் அவர்கள், அரசு தொழில்நுட்ப தேர்வு இயக்ககம் மற்றும் கல்லூரிக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது அவர்கள், கரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்வு தற்போது நடத்தப்படுவதை அறிந்து மகிழ்ச்சியுடன் வந்தோம். ஆனால், சரியாக தேர்வு எழுத முடியாத நிலையை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

பின்னர், அவர்களிடம் கல்லூரி முதல்வர் தனலட்சுமி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தேர்வுத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து மீண்டும் ஒரு முறை வாய்ப்பு பெற்றுள்ளேன். வேறொரு அறையில் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ள நபர்கள் தேர்வு எழுதலாம். விருப்பம் இல்லாதவர்கள் சென்றுவிடலாம்” என தெரிவித்தார்.

இதையடுத்து வேறு வழியின்றி, 3-வது முறையாக சுருக்கெழுத்து தேர்வை தேர்வர்கள் எழுத சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE