திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு - வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும்ஏர்முனை இளைஞர் அணி சார்பில், வெங்காயத்தை தரையில் கொட்டும் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராசு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம். ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், மாநில துணைத் தலைவர் கே.பி.சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்துக்கு பின்பு விவசாயிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. ஓர் ஏக்கர் வெங்காய சாகுபடிக்கு ரூ. 80 ஆயிரம் செலவாகும் நிலையில், ஒரு கிலோ வெங்காயம் ரூ.8-க்கு மட்டுமே விற்பனையாகிறது. ஓர் ஏக்கரில் சராசரியாக 5 டன் மகசூல் கிடைக்கும். தற்போதைய விலையில் ஓர் ஏக்கருக்கு சாகுபடி செய்தால், விவசாயிக்கு ரூ. 40 ஆயிரம் நஷ்டம் ஏற்படும். இதனால் வாங்கியகடனை கட்ட முடியாமலும், அடுத்த சாகுபடிக்கு தேவையான விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் வாங்க முடியாத நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

வெங்காய விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல கூட்டுறவுத்துறை மூலம் குறைந்தபட்ச விலையாக ரூ. 40-க்கு வெங்காயத்தை கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்துக்கு பின்பு, திருப்பூர் ஆட்சியர் சு.வினித்திடம் அனைத்து விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்