கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - இன்று 1,406 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 24.5 லட்சம் நபர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 7.4 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 1,51,685 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 19-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது முகாமில் 94,723 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இன்று (26-ம் தேதி) மூன்றாவது முறையாக கோவை மாவட்டத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளில் 116 முகாம்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 129 முகாம்களும், வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 43 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 151 முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சிறப்பு முகாம் இன்று (செப். 26) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை பெறுகிறது. இதில் 631 நிலையான முகாம்கள், 41 நடமாடும் முகாம்கள் என 672 மையங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்கள், அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்துமையங்கள், பள்ளிகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளன. இதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 2,688 பணியாளர்கள் மற்றும்தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

முதல்கட்டமாக 12-ம் தேதி நடந்த முகாமில் 1,23,163 நபர்களுக்கும், 2-ம் கட்டமாக 19-ம் தேதி நடந்த முகாமில் 89,379 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று (செப். 26) நடக்கும் 3-ம் கட்ட முகாமில் 80,210 நபர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. தற்போது நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் உட்பட 295 மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைகளில் நீலகிரி மாவட்டம் உள்ளதால் அரசு அறிவுறுத்திய அனைத்து கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளையும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்