ராசிபுரம் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். எம்பி ஏ.கே.பி. சின்ராஜ், பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கே.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அங்காடியைத் திறந்து வைத்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் பட்டுவளர்ச்சித்துறையின் கீழ் ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பரமத்தி, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளில் 1,304 பட்டு விவசாயிகள் 2,459 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு வருகின்றனர். மாதந்தோறும் சராசரியாக 50,000 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இங்கிருந்து சேலம், தருமபுரி, கோவை மற்றும் கர்நாடகாவில் ராம் நகரில் உள்ள பட்டுக்கூடு அங்காடிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை இருந்தது. தற்போது ராசிபுரம் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டுக்கூடு கொள்முதல் செய்ய வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பட்டு நூற்பாளர்கள் வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் பயன்பெறுவர், என்றார்.
விழாவில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.2.76 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்பட்டது. திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம், பட்டு வளர்ச்சித்துறை திருச்சி மண்டல துணை இயக்குநர் எல்.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago