காட்பாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான அதிமுக வேட்பாளரை திமுகவினர் வாபஸ் பெற வைத்ததாகக் கூறி அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, 8-வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் அம்பிகாவும். மாற்று வேட்பாளராக ரேவதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், மாற்று வேட்பாளர் ரேவதி மனுவை வாபஸ் பெற்ற நிலையில், பிரதான வேட்பாளரான அம்பிகாவிடமும் தேர்தல் அதிகாரிகள் மனுவை வாபஸ் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அடுத்து வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு, முன்னாள் மாவட்டச் செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் விரைந்து சென்று தேர்தல் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த திமுக மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் மற்றும் திமுகவினர் பிரச்சினை குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். திடீரென திமுக-அதிமுகவினர் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் புகார்
இதையடுத்து, இரு தரப்பினரையும் காவல் துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர். மேலும், அம்பிகாவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர். அதே நேரம், தனது மனுவை வாபஸ் பெற அதிகாரிகள் கையெழுத்து வாங்கியதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் அம்பிகா தரப்பில் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago