மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை பெற பதிவு செய்ய வேண்டும் : ஈரோட்டில் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் அழைப்பு

By செய்திப்பிரிவு

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் மாநகராட்சியில் பதிவு செய்து மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெறலாம் என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு பெரியசேமூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, தொடங்கி வைத்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, குடும்பத்திலுள்ள அனைத்து நபர்களின்‌ சுகாதாரத்‌ தேவைகளைக்‌ கண்டறிந்து சேவைகள்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ நான்கு முக்கிய அம்சங்களான மருந்து வழங்குவது, இயன்முறை சிகிச்சை, நோய்‌ ஆதரவு சிகிச்சை மற்றும்‌ சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்படும்‌.

ஏற்கெனவே பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில்‌, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர்‌ ரத்த அழுத்தம்‌, நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள்‌ இல்லங்களுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் 5.42 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் உயர்‌ ரத்த அழுத்தம்‌ நோயால்‌ பாதிக்கப்பட்ட 3182 பேர், நீரிழிவு நோயால்‌ பாதிக்கப்பட்ட 1521 பேர், இரு நோய்களாலும் பாதிக்கப்பட்ட 532 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில், 5277 பதிவு செய்யப்பட்ட இணை நோய் உள்ளவர்களும், 4980 பதிவு செய்யப்பட்ட தனிநபர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் அதிகபடியான நபர்கள் இருந்தால் அவர்களையும் கண்டறிந்து மருத்துவம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் நோய் குறித்து, மாநகராட்சியில் தகவல் தெரிவித்து பட்டியலில் தங்களது பெயரினை இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்