சீரான குடிநீர் வழங்க கோரி திருப்பூரில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டில் பாரதிநகர், வடிவேல் நகர், மாரியம்மன் கோயில் வீதி, சுப்பையன் வீதி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளுக்கு வாரம் ஒருமுறை, மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2 மாதங்களாக 16 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆழ்குழாய் கிணற்று நீரும் போதிய அளவில் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதுபற்றி புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, சாமுண்டிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் ராம் மோகன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனி வரும் நாட்களில்,வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago