கந்து வட்டியால் அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலை :

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே கண்டமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணா மலை (52). இவர் கம்மந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்காக ஆத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் ஆசிரியர் அண்ணாமலை ரூ 5 லட்சம் வட்டிக்குப் பெற்றுள்ளார். வாங்கிய ஒரே ஆண்டில் வட்டியுடன் சேர்த்து ரூ 11 லட்சம் தர வேண்டும் என வெங்கடேசன் கூறியுள்ளார்.

இது தவிர வட்டார கல்வி அலுவலர் ராமுலு மற்றும் வளத்தி பத்திர எழுத்தர் பாரதி ஆகியோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யலாம் எனக் கூறி அண்ணாமலையை அழைத்து, பணம் அளித்துள்ளனர். அந்தப் பணத்தை தர இயலாத நிலையில், அசல் மற்றும் வட்டிக்காக திருமண மண்டபத்தை எழுதி தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கிடையே, ஆத்தூர் வெங்கடேசன் வட்டியுடன் ரூ 11 லட்சத்தை தருமாறு மிரட்டி வந்துள்ளார். பணம் தராததால் கடந்த 2015-ம் ஆண்டு முதல் திருமண மண்டபத்தை வெங்கடேசன் நடத்தி வந்துள்ளார்.

கடன், கந்து வட்டி பிரச்சினை யால் மனஉளைச் சலுக்கு ஆளான அண்ணாமலை கண்டமநல்லூரில் உள்ள தனது விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். மேலும் கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்த ஆத்தூர் வெங்கடேசன், வளத்தி பத்திர எழுத்தர் பாரதி, மேல்மலையனூர் ஆசிரியர் ராஜாராம், வட்டார கல்வி அலுவலர் ராமுலு ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். கடன் விவரங்கள் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மற்றும் காவல்துறைக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதைக் கண்ட ஆசிரியர் அண்ணாமலையின் உறவினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்த 4 பேரையும் கைது செய்யக்கோரி செஞ்சி சேத்பட் பிரதான சாலையில் உள்ள தேவனூர் கூட்டு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடச் செய்தனர்.

இந்நிலையில் ஆத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன், பத்திர பதிவு எழுத்தர் பாரதி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் வட்டார கல்வி அலுவலர் ராமுலு, ஆசிரியர் ராஜாராம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தற்கொலைக்கு காரணமான மேலும் இருவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என ஆசிரியர் அண்ணாமலையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்