தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் 30-வதுகட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் 100 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இதுவரை மொத்தம் 962 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம்ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடிமற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்றநீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஏற்கெனவே 29 கட்டமாக விசாரணைநடத்தப்பட்டு, 862 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் ஆணையத்தின் 30-வது கட்ட விசாரணை கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இதில்ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு ஸ்டெர்லைட் குடியிருப்பில் வசித்தவர்கள், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார், துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்ததாக பிராமணப் பத்திரம் தாக்கல் செய்த போலீஸார் உட்பட 122 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
10 நாட்களாக நடைபெற்ற இந்தவிசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. ஸ்டெர்லைட் குடியிருப்பில் வசித்து வந்த 53 பேர் உள்ளிட்ட 100 பேர் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 1,330 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் 962 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,237 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒருநபர் ஆணையத்தின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் மாதம் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் தடயவியல் நிபுணர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago