தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக கன்டெய்னரை கிரேன் மூலம் தூக்கிய போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜெயராஜ் சாலை பகுதியில் ஸ்மார்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்கான தளவாடப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் பெட்டியை கிரேன் மூலம் தூக்கி வேறு இடத்துக்கு மாற்றும் பணியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிரேனை தூத்துக்குடி கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்தசெய்யதலி பாதுஷா (35) என்பவர்இயக்கினார். ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்களான தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை எஸ்.குமாரபுரத்தைச் சேர்ந்தசங்கரசுப்பிரமணியன் மகன் காமாட்சிநாதன் (22) மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த லீஸ்டன் மகன் ஜோயல் (33) ஆகிய இருவரும் கன்டெய்னர் பெட்டியின் பக்கவாட்டில் பிடித்தவாறு உடன் சென்றுள்ளனர்.
அப்போது கிரேனின் மேல் பகுதி அந்த வழியாக சென்ற மின்சார வயரில் உரசியதால் கன்டெய்னர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. காமாட்சிநாதன் மற்றும் ஜோயல் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். காமாட்சிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த ஜோயல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி சுந்தரவேல்புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வடிகால் அமைக்கும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஒரு தொழிலாளி மரணமடைந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago