தூத்துக்குடி மாவட்ட மானாவாரி விவசாயிகளின் தேவைக்காக 1,050 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் மூலம் வந்துள்ளது.
குஜராத்தில் இருந்து ரயில்மூலம் நேற்று 2,600 டன் டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் நெல்லைக்கு வந்து சேர்ந்தது. இவை, தேவையைப் பொறுத்து, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் தங்களதுநிலங்களை சாகுபடிக்கு தயார்செய்து வருகின்றனர். நிலங்களில்அடி உரமாக டிஏபி உரத்தை போடுவது வழக்கம். ஆனால், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் டிஏபிஉரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
1,900 டன் உரம் வருகை
இதையடுத்து, தேவையான அளவு டிஏபி உரம் கிடைக்க ஏற்பாடுசெய்யுமாறு வேளாண்மை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதல் டிஏபி உரம் ஒதுக்கீடு பெற முயற்சிகளை மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக 1,050 மெட்ரிக் டன் டிஏபிமற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் மூலம் வந்துள்ளன. இது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் கூறியதாவது: மாதம் தோறும் ஒவ்வொருமாவட்டத்துக்கும் நிறுவனம் வாரியாக உரம் வழங்குவது சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் நிர்ணயிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டிஏபிமற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை அளிக்கப்பட்டது.இதனை ஏற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதல் உரங்களை ஒதுக்கீடு செய்ய வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை வேளாண்மை துணை இயக்குநர் (உரங்கள்) ஷோபா தூத்துக்குடி மாவட்டத்துக்கு இப்கோ நிறுவனம் மூலம் கூடுதலாக 1,050 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ்உரங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்த உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் திருநெல்வேலி ரயில்நிலையம் வந்து சேர்ந்தது. அங்கிருந்து நேற்று இரவு லாரிகள்மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, மானாவாரி சாகுபடி பரப்பு உள்ளவட்டாரங்களுக்கு விநியோகம்செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயனடையலாம்.
தற்போது பெறப்பட்டுள்ள இப்கோ நிறுவன காம்ப்ளக்ஸ் (20:20:0:13) உரம் 50 கிலோ மூட்டையின் விலை ரூ.1,050 ஆகும். இது பிற காம்ப்ளக்ஸ் உரங்களின் விலையை விட குறைவானது. உரம் விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை வரம்புக்கு மேல் உரங்கள் விற்பனை செய்வதையும், கூடுலாக பிற இடுபொருட்களை கட்டாயத்தின் பேரில்விற்பனை செய்வதையும் கண்டிப்பாக தவிர்த்திடல் வேண்டும். மீறுவோர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உர உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago