யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில் - அம்முண்டி கிராம ஊராட்சி தேர்தலை : காலியிடமாக அறிவிக்க நடவடிக்கை :

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள 2,478 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடம் பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 2,049 வாக்குகள் உள்ளன. இதில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் 2 பேருக்கு மட்டுமே வாக்கு உள்ளது. அவர்களும் கலப்பு திருமணம் செய்தவர்கள். பட்டியலின மக்களின் வாக்குகள் அதிகம் இல்லாத நிலையில் ஊராட்சி மன்றதலைவர் பதவியை பட்டியலினத்தவர்களுக்கு எப்படி ஒதுக்கீடு செய்யலாம் என்று கூறியும், ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 9 வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அம்முண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனுக்கள் பெற்ற நிலையில் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை மாற்ற முடியாது. அதேநேரம், அம்முண்டியில் தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் மனுத்தாக்கல் யாரும் செய்யவில்லை என்பதால் அந்த பதவிகள் காலியானதாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.

அப்போது, விலக்கு அளிக்கப்பட்டு அந்த பதவி பொதுப் பிரிவினருக்கு மாற்றி பின்னர் தேர்தல் நடத்தப்படும். தற்போது, அம்முண்டி ஊராட்சி பகுதி மக்கள் காட்பாடி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு என 2 வாக்குகள் மட்டும் செலுத்துவார்கள்.

மற்ற பகுதி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 4 வாக்குகளை ஒரு வாக்காளர் செலுத்துவார்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE