பாலாற்று வெள்ள நீரை : ஏரிகளுக்கு திருப்பி விடும் பணி : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

By செய்திப்பிரிவு

பாலாற்று வெள்ள நீரை ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் தமிழக -ஆந்திர எல்லை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டது. அதேபோல், வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் புல்லூர் தடுப்பணையை கடந்தும் வெள்ள நீர் பாலாற்றில் அதிகளவில் வருகிறது. பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வேலூர் பகுதி பாலாற்றில் சுமார் 3 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாலாற்றை நம்பியுள்ள ஏரிகளுக்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் நீரை திருப்பி விட்டுள்ளனர். இதன்மூலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள செதுவாலை, விரிஞ்சிபுரம், ஒக்கணாபுரம், மேல்காவனூர், கவசம்பட்டு, அப்துல்லா புரம், சதுப்பேரி, மேல்மொணவூர் பெரிய ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்

இந்நிலையில் பாலாற்று நீரை ஏரிகளுக்கு திருப்பியுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப் போது, நீர் நிலைகளில் சிலர் குளிப்பதை பார்த்த அவர், ‘‘பாதுகாப்பு இல்லாமல் மக்கள் யாரும் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்’’ என்ற எச்சரிக்கை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும், பாலாற்று நீரை மற்ற ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணியை துரிதப்படுத்தவும் பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்