திருவண்ணாமலையில் டான்காப் ஆலை வளாகம் உள்ளடக்கிய 10 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் பயன் பாட்டில் உள்ள மத்திய பேருந்து நிலையம் போதுமான வசதிகள் இல்லாததால் ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தி.மலையில் புதிய பேருந்துநிலையம் அமைப் பதற்காக ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள டான்காப் நிறு வனத்துக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்வது குறித்த ஆய்வு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடை பெற்ற ஆய்வில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமார சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தி.மலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் தற்போது போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. இதற்காக, புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். மேலும், திருவண்ணாமலையில் நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்ட டான்காப் நிறுவனத்துக்கு சொந்தமான இடம் 6 ஏக்கர் இடம் இருப்பதை சுட்டிக்காட்டினேன். அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி அந்த இடத்தை நகராட்சி பேருந்து நிலையத்துக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்துக்கு அருகில் அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆக மொத்தம் 10 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கலாம் என்று அரசு கருதுகிறது. டான்காப் ஆலை நிறுவனத்தின் துருபிடித்த இயந்திரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி நிர்வாகத்துறையிடம் இந்த இடம் ஒப்படைக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago