ஓய்வுபெற்ற விமானப்படை அலுவலர் - கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் : ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஓய்வுபெற்ற விமானப்படை அலுவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பிருந்தாவன்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி (55). இவரது மகளுக்கும், ராமநாதபுரம் மகாசக்தி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அலுவலர் சந்திரசேகர் (64) என்பவரது மகனுக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், இரு குடும்பத்தினர் இடையே பகைமை ஏற்பட்டது. இந்நிலையில் 28.7.2017-ல் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் சி பிளாக் பேருந்து நிறுத்தம் அருகே தனது நண்பர்களுடன் சந்திரசேகர் நடைப்பயிற்சி யில் ஈடுபட்டிருந்தார். அப்போது காரில் வந்த வீராச்சாமி மற்றும் அவரது உறவினர்களான வாலாந்தரவையைச் சேர்ந்த நடராஜன் மகன் அருண்குமார் (25), சடையன்வலசையைச் சேர்ந்த ஆனந்தன் மகன் அருண்பாண்டி (24) ஆகியோர், சந்திரசேகரை அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.

வீராச்சாமி உட்பட 3 பேரை கேணிக்கரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

வீராச்சாமி, அருண்குமார், அருண்பாண்டி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE