குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்குட்பட்ட விவசாயிகளில், கடந்த ஆண்டு கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் எடுத்த மற்றும் ஆலைக்கு அதிகளவில் கரும்பு விநியோகம் செய்த விவசாயிகள் 8 பேருக்கு நேற்று சிறந்த விவசாயிகள் பரிசு, விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி, குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ஆகியவை இணைந்து, கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நேற்று கல்லூரி வளாகத்தில் நடத்தின.
இதில், கரும்பு சாகுபடிக்கான வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த கண்காட்சியை வேளாண்மைக் கல்லூரி முதல்வர் அ.வேலாயுதம், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி எஸ்.செல்வசுரபி, வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர்.
கரும்பு சாகுபடி தொழில்நுட்ப கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்துகொண்டு, கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை காட்சிப்படுத்தி, செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, 2020– 2021-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவை பருவத்தில் ஒரு ஏக்கரில் அதிகபட்ச மகசூல் ஈட்டிய, தங்கப்பஉடையான்பட்டி வி.கந்தவேல், அரியானிபட்டி கே.ராஜேந்திரன், பகட்டுவான்பட்டி ஆர்.சதாசிவம், முதலிபட்டி ஜி.ராமையன் ஆகியோருக்கும், ஒரு ஏக்கரில் தனது பெயரில் அதிக டன்கள் விநியோகம் செய்த, விளாரைச் சேர்ந்த எஸ்.முருகேசன், புனல்குளத்தைச் சேர்ந்தவரும் திருச்சி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்பியும் அதிமுக மாவட்டச் செயலாளருமான ப.குமார், நாயக்கர்பட்டியைச் சேர்ந்த எஸ்.அப்துல் அஜிஸ், பி.புண்ணியமூர்த்தி ஆகியோருக்கும் பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து, வேளாண் செயற்பொறியாளர் ஏ.ஏ. செல்லக்கண்ணு ஞானதேசிகன், எஸ்.அய்யம்பெருமாள், வேளாண்மை துணை இயக்குநர் உள்ளிட்டோர் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து கருத்துகளை வழங்கினர். இதில், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago