திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் எழுத மற்றும் படிக்க வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 10 நாட்களில் 27 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின், ‘கற்போம்-எழுதுவோம்’ இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா வரவேற்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர் விஸ்வநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் நசீரா, முன்னாள் தலைவர் ஆ.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்வை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஆ.ஈஸ்வரன் கூறும்போது ‘‘திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் எழுதப் படிக்க வைப்பதுதான், கற்போம்-எழுதுவோம் அமைப்பின் முதல் பணி. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 18 அரசுப் பள்ளிகள் மற்றும் 9 கிராமங்கள் என மொத்தம் 27 பகுதிகளில் வரும் 30-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவுள்ளது.
இதன்மூலம் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு, அந்த ஊர்களில் இருப்பவர்களைக் கொண்டேகல்வி கற்றுத்தருவதை பிரதானமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago