இந்தியாவில் உள்ள 8 ஏல மையங்களில் - தேயிலைக்கு ஒரே மாதிரி விலை நிர்ணயம் : மத்திய,மாநில அரசுகளுக்கு சிறு,குறு விவசாயிகள் வலியுறுத்தல்

By ஆர்.டி.சிவசங்கர்

இந்தியாவில் உள்ள அனைத்து ஏல மையங்களிலும் தேயிலைக்கு ஒரே சராசரி விலை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் 65,000 சிறு, குறு விவசாயிகள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பசுந்தேயிலையை தேயிலைத் தூளாக மாற்ற 15 இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் 180 தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குன்னூர் மற்றும் கொச்சியில் இயங்கி வரும் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தேயிலைத் தூளை, வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், தேயிலைத் தூள் சராசரி விலை, வட மாநிலங்களைவிட குறைவாக தென் மாநிலங்களில் உள்ள ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டு சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன் கூறியதாவது:

தமிழகத்தில், அரசு இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனப்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நிதியை முறையாக, விவசாயிகள் நன்மை அடையும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவில் 8 தேயிலை ஏல மையங்கள் உள்ளன. இவற்றில் தேயிலை ஒரு கிலோ சராசரி விலை ரூ.200-க்கு விற்பனையாகிறது. தென்னிந்தியாவில் உள்ள குன்னூர் மற்றும் கொச்சி ஏல மையங்களில் சராசரி விலை இம்மாதம் ரூ.90, ரூ.75- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள அனைத்து ஏல மையங்களிலும் ஒரே மாதிரியான சராசரி விலையை நிர்ணயிக்க தமிழக அரசு மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்