பர்கூர் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி மேற்கொள்ளும் போது கால்வாய்களை சேதப்படுத்தக் கூடாது என எம்எல்ஏ மதியழகன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
பர்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 15 கி.மீ தூரத்துக்கு உள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகிறது. இப்பணி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும். காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கால்வாயில் தேங்கி உள்ள குப்பைகள், மண் உள்ளிட்டவை வெளியே எடுக்கப்பட்டு, மழைநீர் செல்லும் வகையில் சீர் செய்யப்படும்.
இப்பணி மேற்கொள்ளும் போது கால்வாய் சேதம் அடையாமல், கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணி மேற்கொள்ளும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து பர்கூர் பேருந்து நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள கால்வாய்கள் தூய்மைப் பணிகளை எம்எல்ஏ பார்வையிட்டார். இந்நிகழ்வில், பேரூராட்சி செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago