ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் உற்பத்தி 81 சதவீதமாக உயர்வு :

By செய்திப்பிரிவு

ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் உற்பத்தி 81 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:

ஊத்தங்கரை நூற்பாலையை லாபத்தில் இயங்கிட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்தில் 71.29 சதவீதமாக இருந்த கூட்டுறவு நூற்பாலையின் உற்பத்தி தற்பொழுது 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.3 லட்சம் லாபத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு நூற்பாலையில் தரமான நூல் உற்பத்தி செய்யவும், நஷ்டத்தில் இருக்கும் ஆலையை தொடர்ந்துலாபத்தில் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கூட்டுறவு நூற்பாலையில் நாள் ஒன்றுக்கு 5,500 கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஆலையில் பள்ளிக் குழந்தைகளுக்கான விலையில்லா சீருடை திட்டத்துக்கும், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்கும் அரசு நூல் கிடங்குகள் வாயிலாக நூல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் காட்டன் நூல் சிட்டா ரகங்கள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு நூல் விலை நிர்ணயக்குழு நிர்ணயிக்கும் விலையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சிட்டா நூல், கோவை தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆலையின் மாதாந்திர நூல் விற்பனை மதிப்பு சராசரியாக ரூ.2 கோடியே 80 லட்சம். தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலைக்கு புதிய இயந்திரங்கள் கொள்முதல்செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டதன் மூலமாக ஆலையின்உற்பத்தி திறன் அதிகரித்ததுடன், அரசின் திட்டங்களுக்கு தேவையான நூல் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டும், தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் வரதராஜன், ஆலை மேலாளர் அமலரத்தினராஜ், உதவி மேலாளர்கள் அய்யனார், முனியாண்டி, நிர்வாக அலுவலர் ராஜரத்தினம், வட்டாட்சியர் தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமார், சிவபிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்