புதுக்கோட்டை மாவட்டத்தில் - வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 9-வது வார்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், திருமயம் ஒன்றியத்தில் 5-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர், கீழப்பனையூர், மாங்காடு, அரசமலை, கீழத்தானியம், மறவாமதுரை ஆகிய ஊராட்சித் மன்றத் தலைவர்கள் மற்றும் 41 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு அக்.9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொள்வது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் கவிதா ராமு பேசியது:

வாக்குச்சாவடிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்குள் அமைக்கப்பட வேண்டும். 1,500 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, புதிய வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

புதிய வாக்குச்சாவடிகளானது, வாக்காளர்கள் அதிக தூரம் சென்று வாக்களிக்கும் வகையிலோ, ஆறு, குளம், பள்ளத்தாக்குகளை கடந்து சென்று வாக்களிக்கும் வகையிலோ இருக்கக் கூடாது. புதிய வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்