கே.சாத்தனூர் ஏரியில் படகு சவாரி : சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய சுற்றுலாத்துறை முடிவு

By செய்திப்பிரிவு

திருச்சி கே.கே.நகர் அருகிலுள்ள கே.சாத்தனூர் ஏரியில் படகு சவாரி தொடங்க சுற்றுலாத்துறை ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், வயலூர் முருகன் கோயில் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலாத் தலங்களும், முக்கொம்பு, பச்சமலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட சூழல் சார்ந்த சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

இவைதவிர இம்மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மேலும் சில சுற்றுலா தலங்களை உருவாக்க ஆட்சியர் சு.சிவராசு முனைப்பு காட்டி வருகிறார். இதன்படி வருவாய், பொதுப்பணி, வனம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் மூலம் புதிதாக சுற்றுலா தலங்கள் உருவாக்க வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாநகரை ஒட்டிய பகுதியிலுள்ள ஒரு நீர்நிலையில் படகு சவாரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொன்மலைப்பட்டி அருகேயுள்ள மாவடிகுளம், காவிரி ஆற்றிலுள்ள கம்பரசம்பேட்டை தடுப்பணை ஆகிய இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அப்போது, குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதால் மாவடிகுளமும், குடிநீர் பயன்பாட்டுக்கான நீர்நிலையாக இருப்பதால் கம்பரசம்பேட்டை தடுப்பணையிலும் படகு சவாரி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக தெரியவந்தது.

இந்த சூழலில் கே.கே.நகர் அருகிலுள்ள கே.சாத்தனூரில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரியகுளத்தில் (ஏரி) படகுசவாரி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கட்டளை வாய்க்கால் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரால் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் நீர்நிரம்பி இருப்பதால் இந்த ஏரியில் படகுசவாரி திட்டத்தை செயல்படுத்த சுற்றுலாத்துறை ஆர்வம்காட்டி வருகிறது.

இதையடுத்து இந்த ஏரியில் படகு சவாரி திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியிலான சாத்தியக்கூறுகள் குறித்து வருவாய்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து விரைவில் ஆய்வு மேற்கொள்ள சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கே.சாத்தனூர் ஏரியில் படகுசவாரி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதன் மொத்த பரப்பளவு, எந்தெந்த இடத்தில் எவ்வளவு ஆழம், மொத்த நீர் கொள்ளளவு, ஓர் ஆண்டில் நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் காலம், எந்தெந்த மாதிரியான படகுகளை இயக்க முடியும் என்பது குறித்தும், இங்கு வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வாகன நிறுத்துமிடம், உணவகம், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு அருகிலேயே போதுமான அளவுக்கு இடம் உள்ளதா என்பது குறித்தும் விரைவில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேலும் மாத்தூர்- பஞ்சப்பூர் செல்லக் கூடிய சுற்றுச்சாலை இந்த ஏரியின் குறுக்கே கடந்து செல்வதால், அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் ஆய்வின்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்