தி.மலை ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விரைவாக நிறைவுப்பெற்று கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்தார்.
தி.மலை நகரம் திண்டிவனம்சாலையில் ரூ.30 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. திண்டிவனம் சாலை மற்றும் அண்ணா சாலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை மூலம் மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. அதே நேரத்தில் ரயில் தண்டவாளத்தின் மேல் பகுதியில், ரயில்வே துறை மூலம் பாலம்அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்திய தால், ரயில்வே துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தி.மலைரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணியை விரைவாக மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பின்னர் அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் கூறும் போது, “தி.மலை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவாக நிறைவுப் பெற்று, கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.
அப்போது, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago