வெளிமாநில மீன்கள் விற்பனைக்கு எதிர்ப்பு - புதுச்சேரி விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் :

புரட்டாசியால் மீன்கள் விற்பனை யாகாத சூழலில், வெளிமாநில மீன்கள் விற்பனைக்கு எதிர்ப்புதெரிவித்து புதுச்சேரி விசைப்படகு உரிமையாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உள்ளூர் விசைப்படகு மீனவர்களின் மீன்கள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது புரட்டாசி மாதம் என்ப தால் புதுவையில் இறைச்சி, மீன் விற்பனை சரிந்துள்ளது.

இதனிடையே புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்கள் முழுமையாக விற்பனையாவதில்லை. இதனால் நேருவீதி பெரிய மீன் மார்க்கெட்டுக்கு எடுத்து வந்தனர். பெரிய மீன் மார்க்கெட்டில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மீன்களை மொத்தமாக வாங்கி விற்கும் மீன் வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உள்ளூர் விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி விசைப்படகு உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் கேரளா உள்ளிட்ட வெளி மாநில மீன்களை புதுச்சேரியில் இறக்குமதி செய்ய தடைவிதிக்க வேண்டுமென கூறினர்.

இவ்விவகாரம் தொடர்பாக விசைப்படகு உரிமையாளர் சங்கத்தலைவர் ஜெயமுரளி கூறுகையில், “வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களால், பல லட்சம் பணத்தை முதலீடு செய்து மீன்பிடி தொழில்செய்யும் புதுச்சேரி விசைப் படகு உரிமையாளர்கள் பாதிக்கப் படுகின்றனர்.

வெளிமாநில மீன்களை அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும். விரைவில் முதல்வரை சந்தித்து மனு தருவோம். கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டத்தை தொடர்வோம்” என்று குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தத்தால் புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE