விபத்து வழக்கில் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
நாமக்கல் அடுத்த புதன்சந்தையில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி மதுரையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கதிரேசன் இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, விபத்தில் இறந்த ஜோதியின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதில், பாதித்தொகையை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனமும், மீதித் தொகையை அரசு போக்குவரத்துக் கழகமும் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், கடந்த 7 ஆண்டுகளாக ரூ.15 லட்சம் தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது. இதுதொடர்பாக மீண்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார் . இதன்படி நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்து ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இச்சம்பவத்தால் பேருந்து நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago