கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி மறுப்பு தலமலையில் மலைக் கிராம மக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனப்பகுதியில், கோயிலுக்குச் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் தலமலை வனச்சரகத்தில் உடும்பன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்தால், மழை பெய்யும் என இப்பகுதி பழங்குடியின மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இந்நிலையில், உடும்பன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதற்காக தொட்டாபுரம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அவர்களை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்திய வனத்துறையினர், வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி மறுத்தனர்.

இதனால், வனத்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த அரசுப் பேருந்து அரை மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து தலமலை வனச்சரகர் சுரேஷ் மற்றும் தாளவாடி போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால், ஒரே நேரத்தில் அனைவரும் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை என்றும், சுழற்சி முறையில் கோயிலுக்குச் செல்ல அனுமதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்