ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சில கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள், மகளிர்குழுவினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

நேற்று ஸ்டெர்லைட் ஆலையை ஒட்டியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும்சங்கரப்பேரி பகுதிகளை சேர்ந்தபெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

ஒரு காலத்தில் எங்கள் பகுதியில் விவசாயமும் இல்லாமல், வேலைவாய்ப்பும் இல்லாமல் நாங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தோம். இளைஞர்கள் வேலை தேடி சென்னை, கோவை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்றனர். ஆனால்,ஸ்டெர்லைட் ஆலை வந்த பிறகு வீட்டுக்கு ஒருவருக்கு ஸ்டெர்லைட் ஆலையில் வேலைவாய்ப்பு கிடைத்தது.

மேலும், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் எங்கள் கிராமங்களில் குடிநீர், சுகாதாரம், கல்வி, திறன்மேம்பாடு, கோயில்கள் மேம்பாடு, அங்கன்வாடி மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதனால் ஒரு காலத்தில் பின்தங்கி இருந்த எங்கள் கிராமங்கள் முன்னேற்றமடைந்தன.

இந்த சூழ்நிலையில் சிலரது தவறான நடவடிக்கைகளால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த மூன்றுஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு கிடைத்து வந்த வேலைவாய்ப்பு மற்றும் வசதிகள் அனைத்தும் நின்று போய்விட்டன. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இழந்த வாழ்வாதாரத்தை மீட்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் தா.வசந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அளித்த மனு:ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மறைமுகமாக ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தொடங்கி சிறு, குறு வியாபாரிகள் வரை பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும், நாட்டில் இருந்து தாமிரம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலை மாறி இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதில் தனிகவனம் செலுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை திறந்து இருளில் உள்ளஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களை காப்பாற்றவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE