மோசடி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ததற்காக - ஆற்காடு காவல் நிலைய தனிப்படையினருக்கு எஸ்.பி., பாராட்டு :

ஆற்காட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்து பணம் பறித்துச் சென்ற கும்பலை பிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தொழிலதிபர் ஆட்டோ கண்ணன் என்பவரது வீட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி புகுந்த மர்ம கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி ரூ.6 லட்சம் பணத்தை மிரட்டி பறித்துச் சென்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் இரண்டு கட்டங்களாக 11 பேரை கைது செய்தனர்.

அதேபோல், வாழப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த வழிப்பறி வழக்கில் ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் சிறப்பாக செயல் பட்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகளையும் மீட்டனர். இந்த இரண்டு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படையினரை காவல் கண் காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் நேற்று பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக 14 பேருக்கு டாக்டர் தீபா சத்யன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

இதில், மாவட்ட அளவில் சிறப்பான செயல்பாட்டுக்காக ஆய்வாளர் விநாயகமூர்த்தி (ஆற்காடு நகரம்), உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி (ராணிப்பேட்டை), நீதிமன்ற பணிக்காக மீனா (ராணிப்பேட்டை), ராஜ்குமார் (அரக்கோணம் நகரம்), காவல் நிலைய எழுத்தர்களாக ஜெயவேல் (ராணிப்பேட்டை), தியாகராஜன் (அரக்கோணம் நகரம்), குற்ற வழக்குகளில் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் (அரக்கோணம் கிராமியம்), போக்குவரத்து காவல் பணிக்காக சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் பரிசுகளை பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE