கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடைபெற்ற - சிறப்பு முகாம்களில் 1.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி : பல இடங்களில் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றம்

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில், மொத்தம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 447 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 706 இடங்களில், 90 ஆயிரம் பேர் முதல் 1 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினர் திட்டமிட்டிருந்தனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருப்பவர்கள் தடுப்பூசி முகாமுக்கு ஆர்வத்துடன் வந்தனர்.

கோவை வீரகேரளம், லிங்கனூர் புதூர், அஜ்ஜனூர், வடவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வி.என்.ஆர்.நகர் உள்ளிட்ட இடங்களில் 70 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 30 கோவாக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இவை காலை 10 மணிக்கே தீர்ந்துவிட்டதால், வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கல்வீரம்பாளையத்தில் 40 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டன.

இதேபோல, சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. வ.உ.சி மைதானத்தில் 5 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிறப்பு கவுன்ட்டர்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வாகனத்தில் வந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவை சாய்பாபா காலனியை அடுத்த கே.கே.புதூரில், ராமலிங்க நகர் குடியிருப்போர் நல சங்கம் மூலம் நடைபெற்ற முகாமில், ஊசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்த வந்தவர்களே மருந்து கடைகளில் ஊசியை வாங்கி வந்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் 94,723 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

திருப்பூரில் அதிகம்

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 76,821 பேருக்குதடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, மொத்தம் 672 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 138 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 12,110 பேருக்கு அதிகமாக, மொத்தம் 88,931 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் 295 இடங்களில் முகாம் நடைபெற்றது. இதில், 4,793 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

830 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3,963 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE