கோணங்கியின் எழுத்துகளை உணர அதிகபட்ச பரிச்சயத்தோடு அணுக வேண்டும் : ‘கி.ரா. விருது’ விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

எழுத்தாளர் கோணங்கியின் எழுத்துகளின் அற்புதத்தை உணர, அதிகபட்ச பரிச்சயத்தோடு அணுகுதல் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்தார்.

சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் 2021-ம் ஆண்டுக்கான கி.ரா. விருது வழங்கும் விழா ஜூம் செயலி வாயிலாக நேற்று மாலை நடைபெற்றது. இதில் எழுத்தாளர் கோணங்கிக்கு ‘கி.ரா. விருது - 2021’ வழங்கப்பட்டது. விழாவில், விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் வரவேற்றார். நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நடிகர் சிவக்குமார், சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் கே.கணேஷ்ராம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, “எழுத்தாளர் கோணங்கி தனது எழுத்துகளால் சிதிலங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கிராமம் சார்ந்த மண், அந்த மண் சார்ந்த விலங்குகள், பட்சிகள், பறவைகள், நாடோடி கூட்டங்களின் கதை எனஎங்கெங்கோ ஒழிந்து கிடப்பதையெல்லாம் தேடிச்சென்று தனது அனுபவத்தை பதிவு செய்கிறார்.

இந்த அனுபவங்கள் எல்லாம் சாதாரணமாக எழுதக்கூடிய கதைத் தன்மை மிக்க படைப்புகளுக்கு அந்நியப்பட்டு நிற்கக்கூடிய விஷயங்களாகத்தான் தெரியும். கோணங்கியின் எழுத்தின் மீதான விமர்சனம் அந்த விதத்தில் தான் தொடர்ந்து செல்கிறது. புரிவுபடாத பாதை கோணங்கியின் எழுத்து என்று சொல்வார்கள்.

கோணங்கியின் எழுத்துக்களின் உள்ளே நுழைந்து சென்று அதன் அற்புதத்தை உணர, அதிகபட்ச பரிச்சயத்தோடு அவற்றை அணுகுதல் வேண்டும். பழமையும், புதுமையும் கொண்ட சிறுகதை தொகுப்பைபடைத்துக் கொண்டே இருக்கிறார்கோணங்கி என்றால் மிகையல்ல.கோணங்கியின் படைப்புகளின் உள்நுழைந்து, அதன் தன்மையோடு நாமும் பயணித்துப் பார்த்தால், சிறுகதை பரப்பிலே நவீனத்துக்கான பாதையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய கோணங்கியின் படைப்பு உச்சம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்” என்றார். தொடர்ந்து, எழுத்தாளர் கோணங்கி ஏற்புரையாற்றினார். முனைவர் உஷாராணி விழாவை ஒருங்கிணைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்