புதுவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு - 106 ஏக்கர் நிலம் ஆர்ஜித பணிகளை தொடங்கியது தமிழக அரசு :

By செய்திப்பிரிவு

புதுவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு 106 ஏக்கர் நிலம் தர ஆர்ஜித பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்குள்ள ஓடுதளம் 1,502 மீட்டர் மட்டுமே கொண்டது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்து செல்ல முடியும். 3,300 மீட்டர் ஓடுதளம் இருந்தால்தான் பெரிய ரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்காக கூடுதலாக 1,800 மீட்டர் ஓடுதளம் அமைக்க 240 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தைச் சேர்ந்த மொரட்டாண்டி, ஆரோவில் பகுதியில் கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்று விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி எடுக்கும் புதுச்சேரி அரசின் சுற்றுலா அமைச்சர் லட்சுமி நாராயணன் இதற்கான கூட்டம் நடத்தி தெரிவித்திருந்தார். ஆளுநர் தமிழிசையும், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி, நிலம் கையகப்படுத்தி வழங்க கோரிக்கை வைத்தார்.

அதைத்தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி ஆளுநர் தமிழிசை வலியுறுத்தினார். விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக புதுவை அரசு சார்பில் மத்திய அரசிடம் விளக்கப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "தமிழக அரசு முதல்கட்டமாக 106 ஏக்கர் நிலத்தை புதுவை அரசுக்கு கையகப்படுத்தி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

விழுப்புரம் ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசியபோது, நில ஆர்ஜித நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். ஆர்ஜிதம் செய்த பின்பு அதற்கான தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும்” என்று தெரிவித்தார்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான முதல்கட்ட நில ஆர்ஜித பணிகள் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்து பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்