தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்தால் ஓசூரில் விமான நிலையம்: கிருஷ்ணகிரி எம்பி தகவல் :

By செய்திப்பிரிவு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர் அருகே ‘உதான்’ திட்டத்தில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பெங்களூரு விமான நிலைய பராமரிப்பு தனியார் வசம் வழங்கப்பட்டபோது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு பெங்களூரு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 150 கிமீ சுற்றளவில் எந்த விமான நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்படக் கூடாது என்ற நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், தொடர் பேச்சுவார்த்தை மற்றும் அழுத்தம் காரணமாக தற்போது ஓசூர் அருகே விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழக முதல்வரின் உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார்.ஓசூர் அருகே ஏற்கெனவே உள்ள தனியார் ஏர்ஸ்பேசின் அருகே விமான நிலையத்தில் கட்டமைப்பை ஏற்படுத்தித் தந்தால் அல்லது புதிதாக நிலம் ஒதுக்கீடு செய்தால் மத்திய அரசு விமானம் நிலையம் அமைக்க தயாராக உள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் நேரில் சந்தித்து, தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கக்கோர உள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த திட்டத்துக்கு உதவ முன்வந்தால் ஓசூரில் விமான நிலையம் விரைவில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE