ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேலானவர்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். இதில், 59 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 2 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேருக்கு போடப்பட்டு 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 847 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில், ஒரு லட்சத்து 1247 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருந்ததால், 538 இடங்களில் நேற்று முகாம் நடந்தது. இதில், 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய சிறப்பு முகாம் பணியில் 2300 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், மாலை 4 மணியளவில் இலக்கைத் தாண்டி 48 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மொத்தம் 306 நிலையான முகாம், 19 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 31,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முகாம்களுக்கு காலை முதல் ஆர்வமுடன் வந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 448 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இலக்கைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் ஆய்வு
இதனிடையே, திருச்செங் கோட்டில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 60 ஆயிரம் ஆக உள்ளது. அதில் சுமார் 56 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 62 சதவீதம் கர்ப்பிணி பெண் களுக்கும், 37 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கும், 79 சதவீதம் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 நகராட்சிகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உதகை மாவட்டத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.
ஆய்வின்போது, சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், எம்எல்ஏ ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago