தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸார் தீவிர ரோந்து - ஒரேநாளில் 2,056 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு : 96 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் அந்தந்த துணை கோட்ட டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸார் நேற்று முன்தினம் தீவிர சோதனை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுட்டனர். 96 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டன. மேலும், 2,500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 2,056 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் 47 பேர் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 75 பேரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட 402 முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டன.

19 பேர் கைது

இதுதவிர 44 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 19 பேர் கைது செய்யப்பட்டு 98 மதுபாட்டில்களும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டு, 597 புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்ட்டன. பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் 2,393 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் : கரோனா ஊரடங்கு தளர்வு உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை ஒரே நாளில் நடந்த வாகனச் சோதனையில் ஹெல்மெட், உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிக பாரம் ஏற்றிச் சென்றது என, விதிகளை மீறியதாக 2,393 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்