தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் - 635 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் :

தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 417 இடங்களில் கரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அன்று 805 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் ஒரே நாளில் சுமார் 74 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து 2-வது மெகா தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 417 இடங்களில் நேற்று நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 80 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை ஆணையர் தி.சாரு நேரில் பார்வையிட்டார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சில இடங்களில் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் விரைவிலேயே தீர்ந்து போயின. இதனால் தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 268 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கிராமப்புறங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதிகபட்சமாக குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 61 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. முஞ்சிறை ஒன்றியத்தில் 57 மையங்களில் முகாம் நடைபெற்றது. கிள்ளியூரில் 54, மேல்புறத்தில் 53, அகஸ்தீஸ் வரத்தில் 43 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. குமரி மாவட்டத்தில் இதுவரை 11.50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE