காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக ஈரப்பதத்தை காரணம் காட்டி குறுவை நெல் கொள்முதல் தட்டிக்கழிக்கப்படுவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால், பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. வாய்க்கால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகில் கொள்முதல் நிலையங்கள் அமைந்திருப்பதால், அவற்றை திறக்க முடியவில்லை என காரணம் கூறி நெல் கொள்முதலை நுகர்பொருள் வாணிபக் கழகம் தட்டிக்கழிக்க முயற்சிக்கிறது.
மேலும், பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் இருப்பதை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யப்படாமல் தட்டிக்கழிக்கப்படுகிறது. இதனால், வீதிகளில் நெல்லை கொட்டி வைத்து, மழையில் அழிவதைப் பார்த்து விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
முன்கூட்டியே திட்டமிட்டு, 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், கடந்த கால நடைமுறைகளைப் பின்பற்றி, ஈரப்பதத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்று, பின்னர் அனுமதி பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்து, கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு நெல் கொள்முதல் செய்யாததற்கு மத்திய அரசை காரணம் காட்டுவது பொறுப்பற்ற செயல் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago