ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனத் தினால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை காட்டிலும் வெயில் அளவு அதிகமாக பதிவானது. பகலில் வெயில் சுட்டெரித்ததால் இரவில் புழுக்கம் அதிகரித்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை பரவலாக மழை பெய்தது. காட்பாடி, சத்துவாச்சாரி, வேலூர் நகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல, சனிக்கிழமை இரவு காட்பாடி மற்றும் வேலூர் பகுதியில் மிதமான மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவியது. பகலில் அனல் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் பகலில் வெப்பம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியது. பிறகு லேசான சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் கனமழை கொட்டியது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. திருப்பத்தூர் மட்டுமின்றி, வாணியம்பாடி, ஆம்பூர், வடபுதுப்பட்டு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், பல இடங் களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்திலும் வெயில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரம் மழை பெய்தது. வாலாஜா, ஆற்காடு, அம்மூர் போன்ற பகுதிகளில் கன மழை நீடித்தது. வாலாஜா பகுதியில் பெய்த கனமழையால் வாலாஜா டவுன் சீனிவாச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் (55) என்பவரின் ஓட்டு வீடு மழையால் இடிந்து விழுந்தது.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், மழையால் வீடு இழந்த முருகேசனுக்கு அரசின் இழப்பீடு மற்றும் நிவாரணப்பொருட்களை வாலாஜா வருவாய் துறையினர் நேற்று வழங்கி, முருகேசன் குடும்பத்தாரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் வருமாறு:
வேலூர் 3.1 மி.மீ., காட்பாடி 10.8, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 13.8, என மொத்தம் 27.70 என பதிவாகியிருந்தது. வாணியம்பாடி 87 மி. மீ., ஆம்பூர் 68.4, வட புதுப்பட்டு 35.4, கேத்தாண்டப்பட்டி 17, நாட்றம்பள்ளி 13.2, ஆலங்காயம் 8, திருப்பத்தூர் 4.1 என மாவட்டம் முழுக்க மொத்தம் 233 மி.மீ, மழையளவு பதிவாகியிருந்தன. வாலாஜாவில் 41.6 மி.மீ., ஆற்காடு 20.1 மி.மீ., அம்மூர் 30 மி.மீ., என மொத்தம் 91.1 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago