நாட்றாம்பள்ளியில் பழுதடைந்துள்ள - மின்மாற்றியை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் :

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், தகரகுப்பம் அடுத்த கவுண்டர் வட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மின்மாற்றி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றி பழுதடைந்ததால் இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பழுதடைந்த மின்மாற்றி முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கவுண்டர் வட்டத்தில் உள்ள மின்மாற்றி பழுதடைந்து ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால், அடிக்கடி மின்விநியோகம் தடைபடுகிறது. தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் மின் விநியோகம் இருப்பது இல்லை. இதனால், விவசாய நிலங்களுக்கு பம்ப் செட் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடிவதில்லை. தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வாடுகின்றன. ஒரு சில நேரங்களில் குறைந்த அழுத்த மின் விநியோகமும், சில நேரங்களில் உயர் அழுத்த மின்விநியோகம் வழங்கப்படுகிறது. உயர் அழுத்த மின் விநியோகம் திடீரென வழங்கப்படுவதால் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள் சேதமடைகின்றன.

இது தொடர்பாக நாட்றாம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், திருப்பத்தூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பல முறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இது குறித்து தகவலறிந்த நாட்றாம்பள்ளி காவல் துறையினர் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் விரைவில் மின்மாற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் காவல் துறையினர் மூலம் வாக்குறுதியளித்தனர்.

இதனையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE