கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - காங்கேயநல்லூரில் பொதுமக்கள் போராட்டம் : காவல் துறையினர் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

காங்கேயநல்லூரில் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காங்கேயநல்லூரில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், கழிவு நீரேற்றும் நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், காங்கேயநல் லூர், திருவள்ளுவர் நகர், வெள்ளைக்கல்மேடு, குமரன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் நேற்று காலை முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நெற்கதிர்களை கையில் ஏந்தியபடி கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘காங்கேயநல்லூரில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த இடத்தில் நெற்களம் இருந்தது. அந்தக் களத்தை இடித்து விட்டு அங்கு கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் எப்படி அனுமதியளித்தனர் என தெரியவில்லை.

இப்பகுதியில் விவசாயிகளுக்கு நெற்களம் இல்லை. நெற் பயிர்களை நடுரோட்டில் வைத்து காய வைக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பகுதியின் அருகில் காங்கேயநல்லூர், திருவள்ளுவர் நகர், வெள்ளைக்கல் மேடு, குமரன் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இது மட்டுமின்றி இப்பகுதியில் கோயில்கள், கல்லூரிகள், தேவாலயம் உள்ளன. பிரசித்திப்பெற்ற கிருபானந்த வாரியார் நினைவு மண்டபம் மிக அருகாமையில் உள்ளது .

கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதால் உடல்நிலை சீர்கேடு ஏற்படும். வாந்தி, மயக்கம் காலரா, டெங்கு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், கழிவுநீரால் நிலத்தடி நீரும் மாசு அடையும். எதிர்காலத்தில் நச்சுக் கழிவு மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். மண்ணின் தரம் கெட்டு விவசாயம் மற்றும் குடிநீர் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நெற்களத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கழிவுநீரேற்று நிலையம் அமைப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, குடியிருப்புக்கு அருகா மையில் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

குடியிருப்புகள் மற்றும் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் கழிவு நீரேற்று நிலையத்தை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துக்கொள்ளலாம். பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து விருதம்பட்டு காவல் துறையினர் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகசெய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்