தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்று செங்கை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை செப்டம்பர் 13-ம் தேதி வெளியிட்டு தேர்தல் நடத்தைவிதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 154 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 359 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 2,679 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 22-ம் தேதி வேட்பு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 சுழற்சிகளில் 24 மணி நேரமும் ஊரக உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் போக்குவரத்து வாகனங்களை சோதனை செய்தல், தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படுவதைக் கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எத்தவொரு ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் வேட்பாளர்களோ அவரின் முகவர்களோ அல்லது வேட்பாளர் தொடர்பான எவரும் எடுத்துச் செல்லக்கூடாது. அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்றது. வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை அலுலவலர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல்தொடர்பான புகார்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1800 599 76256 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார். 044 – 274274468 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் பாதுகாப்புக்காக செங்கல்பட்டு முழுவதும் பல்வேறு பணிகளுக்காக 1,165 காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர். மேலும் 4 பறக்கும் படைகளும், 16 ரோந்து வாகனங்களும், 21இரு சக்கர ரோந்து வாகனங்களும், மாவட்ட எல்லை பகுதிகளில் 8சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago