இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் - ஆதார் பதிவுக்காக நாள் முழுவதும் காத்திருக்கும் மக்கள் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் பதிவுக்காக நாள் முழுவதும் கிராம மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழக ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் பதிவு முறை அமல் படுத்தப்பட்டது. அதன்படி, விரல் ரேகை பதிவுக்கு பிறகே ரேஷன் பொருட்கள் விநியோகிக்க வேண்டும்.

முதியோர், மாற்றுத்திறனாளி களாக இருந்தால் குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர்கள் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்கள் அனுமதி பெற்று விரல் ரேகை பதிவின்றி பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கலாம். விரல் ரேகை பதிவு ஜூலை 1-ம் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கிய விற்பனையாளர்களுக்கு வழங்கல் பிரிவு அதிகாரிகள் ரூ.1,000 அபராதம் விதிக்கின்றனர். இதனால் விரல் ரேகை பதிவாகாதவர்களுக்கு பொருட்கள் கொடுக்க ரேஷன் கடை ஊழியர்கள் மறுத்தனர். இதையடுத்து விரல் ரேகையை மீண்டும் பதிவு செய்வதற்காக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

இளையான்குடி வட்டத்தில் இளையான்குடி பேரூராட்சி மற்றும் 55 ஊராட்சிகள் இருப்பதால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதையடுத்து டோக்கன் முறையில் ஆதார் பதிவு செய்யப்படுகிறது. இருந்தாலும் சர்வர் பிரச்சினையால் ஒருவருக்கு பதியவே 15 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து ஆதார் சேவை பிரிவு பணியாளர்களிடம் கேட்டபோது, ‘சர்வர் பிரச்சினை பல மாதங்களாகவே உள்ளது. இதனால் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் குறைவான நபர்களே வந்ததால் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் தற்போது பயோமெட்ரிக் பதிவுக்காக ஏராளமானோர் வருகின்றனர். அதனால் சிரமம் உள்ளது’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்