பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வரும் பக்தர்களை கோயிலுக்குள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கடை பிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம்.
கரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோயில்களில் பக்தர்கள் பங்கேற்பின்றி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயிலுக்கு வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி கணவாய்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், பாளேகுளி அனுமந்தராய சுவாமி கோயில்களில் பக்தர்கள் வெளியில் இருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இருப்பினும் கோயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் இருந்தது.
இதுதொடர்பாக பக்தர்கள் சிலர் கூறும்போது, “கரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பவர்கள், உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனத் துக்கு அனுமதிக்க வேண்டும்” என்றனர்.
கோயிலுக்கு வெளியே வழிபாடு
சேலத்தில் உள்ள பெருமாள் கோயில்களில், பூட்டப்பட்ட வாயில்கள் முன்பாக பக்தர்கள் வழிபட்டனர்.சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நாராயணர் கோயில் உள்பட நகரின் முக்கிய பெருமாள் கோயில்களுக்கு வந்த பக்தர்கள் கோயில் வாயிலிலேயே விளக்கேற்றி வழிபட்டனர். இதனிடையே, பெருமாள் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு, வழக்கமான அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
உழவர் சந்தையில் அதிக விற்பனை
புரட்டாசி சனிக்கிழமை முக்கிய விரத நாளாக பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை ரூ.60 லட்சத்துக்கு விற்பனையானது. அதிகபட்சமாக சூரமங்கலம் உழவர் சந்தையில் ரூ.11 லட்சத்து 41 ஆயிரத்து 365-க்கும், 2-வதாக ஆத்தூர் உழவர் சந்தையில் ரூ.10 லட்சத்து 51 ஆயிரத்து 120-க்கும், 3-வதாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 686-க்கும் காய்கறிகள், பழங்கள் விற்பனையானது. 11 உழவர் சந்தைகளிலும் நேற்று ஒரே நாளில் 206.176 டன் காய்கறிகள், 28.254 டன் பழங்கள் விற்பனையானது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago